பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்: ஜி7 மாநாட்டில் தலைத்தூக்கும் உலக போர் விவாதம்

0
90

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இத்தாலியின்அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக செயற்படுகின்றன.

வருடந்தோறும் நடைபெறும் மாநாட்டில் தலைமை பொறுப்பு வகிக்கின்ற நாடு ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இந்த வருடம் தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடாத்தும் இத்தாலி, இந்தியா உட்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷிய ஆக்கிரமிப்பு பற்றிய அமர்வில் பங்கேற்பார் என கூறப்படுகின்றது. ரஷ்யா – உக்ரெய்ன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் குறித்த விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியம் வாய்ந்த மாநாடாக பார்க்கப்படுகின்றது.

இதன்போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.