இனி பூனை, நாய் வளர்க்கலாம்; சிங்கப்பூரில் 34 ஆண்டுகால தடை முடிவுக்கு வந்தது

0
50

பொது வீட்டுத் திட்டங்களில் பூனை மற்றும் நாய் வளர்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிங்கப்பூர் அரசாங்கம் நீக்கியுள்ளது. 1989 ஆம் ஆண்டுமுதல் பொது அடுக்கு மாடி குடியிருப்புகளில் பூனைகள் மற்றும் நாய்கள் வளர்க்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் அடுக்குமாடியில் வசிக்கும் மக்கள் செல்லப்பிராணிகள் மீது பிரியம் கொண்டும் வளர்க்க முடியாதிருந்தனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் 90 வீதமான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க அனுமதியளித்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரில் நிலவிவந்த வீட்டுவசதி பற்றாக்குறை காரணமாக இவ்வாறு செல்லப்பிராணிகள் வளர்க்க 1989 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

செல்லப்பிராணிகள் பொது இடங்களில் மலம் கழிப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டமை, பூனைகளின் உரோமங்களை அடுக்குமாடிகளில் பரவியமை உட்பட பல்வேறு காரணிகளின் பிரகாரம் இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமையால் தடை நீக்கப்பட்டுள்ளது. என்றாலும் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரமே செல்லப்பிராணிகளை வளர்க்க முடியும்.

இரண்டு விதமான பூனைகள் மற்றும் ஒரு நாய் இனத்தை வளர்க்க குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை மைக்ரோசிப் செய்து பதிவு செய்ய வேண்டும்.

பூனைகளை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உரிமையாளர்கள் போதுமான பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் விலங்குகளுக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய விதிகள் 2024 செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்.