வங்கிக் கணக்குகளுக்கு இந்தியாவிலிருந்து பணம்!

0
116

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் கைதான 04 இலங்கையருடனும் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், மாவனல்லை பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களினதும் வங்கி கணக்குகளுக்கு இந்தியாவிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவர்களது வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட்டுள்ள தாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணத்தை, இவ்விரண்டு சந்தேகநபர்களும், தற்போது தீவிரமாக தேடப்பட்டு வரும் தெமட்டகொட ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற நபரிடம் வழங்கியுள்ளனர்.

இந்த பணத்தை தெமட்டகொட ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற நபர், இந்தியாவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரிடமும் வழங்கியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

மாவனெல்லை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் சேர்த்து, இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது இதுவரை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களும், அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் இந்தியா செல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையரும், இந்தியாவுக்கு செல்வற்கு முன்னர் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலுள்ள ஒரு இடத்தில் ஒன்று கூடி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் சந்திப்பு நடத்திய போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை, அவர்களது கையடக்கத் தொலைபேசியிலிருந்து இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.