உளநலனை சீராகப் பேணுவதன் மூலமே ஆரோக்கியமான உடல்நலம் பெறலாம்

0
52

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி உள ஆரோக்கியமும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் உள ஆரோக்கியம் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.

உளவியல் தாக்கமானது மனஅழுத்தத்தின் ஆணிவேராக இருக்கின்றது. ஒருவர் தனது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு உளவியல் தாக்கம் தடையாக அமைகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், வளர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் உளரீதியான நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். குடும்ப வாழ்விலும் தொழில்புரியும் இடங்களிலும் பலர் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். .இதனால் அவர்களின் உடல் (நலன்) ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உளவியல் தாக்கம் ஏற்படுகிறது.

உளவியல் தாக்கம் ஏற்படக் காரணங்கள் வருமாறு:

 • *வளரும் பருவத்தினர் சிறுவர் பெரியவர் ஆகியயோரில் ஏற்படுகின்ற உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள்.
 • *போதுமான தூக்கமின்மை, தொலைக்காட்சி பார்த்தல், ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழித்தல்.
 • *கல்வி மற்றும் பரீட்சைகளில் முகம்கொடுக்கின்ற சவால்கள்.
 • * விளையாடுவதற்கும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் போதிய நேரமின்மை.
 • * அடிக்கடி இரைச்சல் மிகுந்த ஒலிகளை செவிமடுத்தல்.
 • * தாம் வாழும் சூழலில் எதிர்கொள்கின்ற முரண்பாடுகள் துஷ்பிரயோகங்கள்.
 • *நண்பர்கள் மற்றும் சகோதரர்களிடையே ஏற்படும் சண்டைகள் மனத்தாக்கங்கள்.
 • * புகைத்தல், மதுபாவனை, போதைவஸ்து பாவனை.
 • * முறையற்ற பாலியல் தொடர்புகளில் ஈடுபடுதல், இதனால் மன அழுத்தம் ஏற்படல்.

உளவியல் தாக்கமானது மன அழுத்தத்தின் ஆணிவேராக இருக்கின்றது. ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது அதன் அடையாளமாக உடல்சார்ந்த அசௌகரியம் ஏற்படும்.

உளத்தாக்கத்தின் அறிகுறிகள்:

 • தலைவலி, கழுத்து மற்றும் தோள்மூட்டில் தசை வலி.
 • எப்போதும் உடல் வலியை பற்றி கதைத்தல்
  *பசியின்மை வயிற்றில் எரிச்சல் இருத்தல்
  *ஒழுங்கற்ற நித்திரை, குடும்பச் சண்டை, உறவில் விரிசல், இலகுவில் கோபமடைதல், இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுதல்.

எனவே மனப்பதற்றத்தைத் தவிர்த்து கோபத்தை அடக்கிஆளுதல் வேண்டும்.

சிறந்த உள ஆரோக்கியத்தின் நன்மைகள் எவை?

கிரகித்தல், ஞாபக சக்தி, புத்திக்கூர்மை போன்றன அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரம் போன்றன விருத்தியடையும், கல்விப்பெறுபேறுகள் சிறப்பாக இருத்தல், கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற எதிர்மறையான குணங்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவிருக்கும்.

வீடு பாடசாலை காரியாலயம் மற்றும் சமுதாயத்தில் சிறந்த உறவைப்பேண முடிதல். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

சிறந்த உள ஆரோக்கியத்தை பெறுவதற்கு நாம் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை தவிர்த்தல், தொலைக்காட்சி பார்த்தல், கணனி என்பவற்றில் அதிக நேரம் ஈடுபடுதல் போன்றவற்றைத் தவிர்த்தல்.

விளையாடுதல், மதுப்பாவனை, போதைவஸ்து, முறையற்ற பாலியல் தொடர்பு என்பற்றைத் தவிர்த்தல், சமயப் பண்புகளைப் பின்பற்றி நடத்தல்,மனதுக்கு அமைதியைத் தருகின்ற நடவடிக்கையில் ஈடுபடுதல், நேர் சிந்தனை மற்றும் உயர்ந்த மனப்பாங்கை விருத்தி செய்தல், உடற்பயிற்சி செய்தல், சுறுசுறுப்பாக இருத்தல், உறவுகளுடன் அன்பாகநடத்தல், பிறருக்கு உதவுதல், போதுமான தூக்கத்தைபெறுதல், சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்தல்.

மனதை இலேசாக்கி சாந்தப்படுத்துவதற்கு போதுமானளவு நித்திரை அவசியம். அதிக நேரம் கல்வி கற்றலில் ஈடுபடும் மாணவர்களது ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர்வதற்கு நல்ல நித்திரை அவசியம். உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும் தினமும் உடல் மற்றும் மனதிற்கு ஏற்பட்ட சேதங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நித்திரை உதவுகின்றது.

கலாசார மற்றும் சமய விழுமியங்களை வளர்த்துக் கொள்வதும் அவசியம். சிறந்த ஆன்மீகம் ஒழுக்கப்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

கருணை, பரிவு, அன்பு, பொறுமை காத்தல், பிறர் நலம் பேணுதல், மற்றவருக்கு உதவுதல் போன்ற விடங்களில் ஈடுபடுவது சிறந்த உளநலத்துக்கு உதவும்.