இலங்கையின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பந்துல எடுத்துரைப்பு

0
55

சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது எனவும், அதனால் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு சர்வதேச ரீதியில் கடனுதவிகளை பெற்றுக் கொள்ள நேரும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார வளர்ச்சி

“நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களால் நாட்டைப் பாதுகாக்க முடியாது என தெரிவித்து எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல மாற்று வேலைத் திட்டம் ஒன்றை சபையில் முன் வைத்தார்.

புதிய அரசாங்கத்திற்கு அதனை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது முற்றிலும் தவறான எண்ணம். 2001 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுதந்திரத்திற்குப் பின்னர் 1. 4 ஆக காணப்பட்டது. அப்போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு சமமான நிலை நாட்டில் உருவாகியது. வட்டி வீதம் அதிகரித்தது. அந்நிய செலாவணி வீதம் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கீழ் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உருவாக்கப்பட்டு அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நியதிகள் உள்ளடக்கப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க

அது 2003 மூன்றாம் இலக்க அரச முகாமைத்துவ பொறுப்பு சட்டமாகும். அதன் பின்னர் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சட்டரீதியாக தேவையை நிறைவேற்றி நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தற்போது ரணில் விக்ரமசிங்கவாலேயே முடிந்துள்ளது.

எனவே நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு சர்வதேச ரீதியில் கடனுதவிகளை பெற்றுக் கொள்ள நேரும். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் பயணிக்கும் பாதையிலிருந்து மாறி வேறு மாற்று வழிக்கு சென்றால் நாட்டுக்கு ஏற்படும் அழிவுக்கு தனியாகவோ அல்லது ஒருமித்தோ தற்போதைய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்படும்.” என்றார்.