பல ஆயிரம் கோடி ரூபாய் ‘தங்கச் சுரங்க’ மோசடி – 2 நாடுகளில் ஏமாற்றியவர் அமெரிக்க நிறுவனத்தால் சிக்கியது எப்படி?

0
71

இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றைத் தாங்கள் கண்டுபிடித்ததாக கனடா நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து பலர் அந்த சுரங்க நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல, இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பல உண்மைகள் பின்னர் வெளிவந்தன.

அவை இப்போது ஒரு புதிய பாட்காஸ்ட் தொடர் மூலம் விவாதிக்கப்பட்டன.

ஆனால் இன்று வரை அந்த சுரங்க நிறுவனத்தின் தலைமை புவியியலாளரின் மர்மமான மரணம் குறித்த உண்மை மட்டும் வெளிவரவில்லை.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

மார்ச் 19, 1997. அன்று காலை கனடிய சுரங்க நிறுவனமான ப்ரீ-எக்ஸ் மினரல்ஸின் (Bre-X Minerals) தலைமை புவியியலாளர் மைக்கேல் டி குஸ்மான் ஒரு ஹெலிகாப்டரில் தனது குழுவுடன் ஏறினார். இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அவர்கள் சென்றடைய வேண்டும். அது தங்கம் நிறைந்த பகுதி என்று சொன்னார்கள்.

இதற்கு முன்னரும் பலமுறை இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் மைக்கேல். இருப்பினும், இந்த முறை அங்கு சென்ற மைக்கேல் திரும்பி வரவில்லை. பயணத்தின் போது ஹெலிகாப்டரின் பின்புற இடது கதவை திறந்து, அடர்ந்த காடுகளுக்குள் மைக்கேல் குதித்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.

மைக்கேல் தற்கொலை செய்து கொண்டதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். அவர் ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் தீவிரமான மலேரியாவுடன் தொடர்ச்சியாக போராடியதால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கனேடிய பத்திரிகையாளர் சுசானே வில்டன், மைக்கேல் குஸ்மானின் மரணம் குறித்து விசாரிக்க, கல்கரி ஹெரால்டு செய்தித்தாளின் சார்பாக அங்கு அனுப்பப்பட்டார்.

“அந்த செய்திக்காக உலகின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நான் அனுப்பப்பட்டேன், அன்றிலிருந்து இன்று வரை என் மனதில் அந்தக் கதை அப்படியே இருக்கிறது,” என்கிறார் சுசானே.

ஒரு புதிய பாட்காஸ்ட் தொடருக்காக அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீண்டும் ஒன்று கூடினார்கள். உண்மையில் அந்த ஹெலிகாப்டர் பயணத்தின் போது என்ன நடந்தது? மைக்கேல் குஸ்மானின் மரணம் தற்கொலை தானா?