தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பில் சட்டம் – விஜித ஹேரத்

0
98

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பான சட்டம் ஒன்றை தயாரிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் உண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும், அதனை அந்த மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் நாளாந்த கொடுப்பனவில் 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனமாகவும், மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தின் யோசனைக்கு உடன்படாததால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வேதனம் கிடைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க விரும்பினால், வர்த்தமானிக்கு சவால் விடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனமாக 1,700 ரூபாவை வழங்குவதற்கு சட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களில் தேயிலை மீள்நடுகை நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.