ருமேனியா அனுப்பும் சட்டவிரோத நிறுவனம்! இருவர் கைது!

0
34

போலி ஆவணங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையை போலியான முறையில் பயன்படுத்தி இளைஞர்கள் குழுவொன்றை ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்ப முயன்ற நபரை  கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப்  பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக ருமேனியாவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வந்த ஐந்து இளைஞர்களின் ஆவணங்களைச் சரிபார்த்த அவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள், அவர்களுடன் வந்த முகவர் நிறுவனத்தின் பிரதிநிதியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதன்போது, குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம் சட்டவிரோதமான நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.

எனவே, வெளிநாடு செல்ல வந்த இளைஞரின் பணியகப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்த போது, பணியகத்தின் பாதுகாப்பு முத்திரைகள், உத்தியோகபூர்வ முத்திரைகள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட ருமேனியா விசாக்கள் போலி விசாக்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.