‘Time 100’ செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியல்: LGBTQ குரல் கொடுத்த இலங்கையின் Rosanna பெயர் இணைப்பு

0
29

இலங்கையில் LGBTQ சமூகத்தின் குரலாக அறியப்படும் Rosanna Flamer-Caldera பிரபல TIME சஞ்சிகையால் 2024 ஆம் ஆண்டிற்கான (Time 100) மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

“Time 100” என்பது அமெரிக்காவின் பிரபல செய்தி இதழான TIME வெளியிடும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலாகும்.

1999 ஆம் ஆண்டு முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் LGBTQ சமூகத்தின் குரலாக அறியப்படும் Rosanna Flamer-Caldera உள்வாங்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் LGBTQ சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அவரது இடைவிடாத வாதங்கள் உலகளாவிய LGBTQ சமூகப் பெண்களுக்கு ஒரு பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது.

2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கிடையிலான ஓரினச்சேர்க்கைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிரான முக்கிய வழக்கில் ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு ஆதரவளித்தது.

இந்த வழக்கு இலங்கை அரசியலில் LGBTQ சமூக உரிமைகளை முன்னிலைப்படுத்தியது. அந்த முடிவைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திருத்தத்தை எதிர்க்கப் போவதில்லை என்று கூறியுள்ள நிலையில் உத்தேச அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக TIME தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.