எங்களுக்கு கல்வி, வேலைதான் வேண்டும்” – இலவச சேலைகளை அரசுக்கே திருப்பி அனுப்பிய பழங்குடி பெண்கள்

0
35

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசின் அந்த்யோதயா திட்டத்தின்கீழ் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா புடவைகள் வழங்கப்பட்டன. ஆனால், அம்மாவட்டத்தின் ஜவ்ஹர், டஹானு மற்றும் விக்ரம்கட் தாலுகாவை சேர்ந்த சுமார் 300 பெண்கள் அந்த புடவைகளை வட்டாட்சியர் அலுவலத்தில் திருப்பிக் கொடுத்தனர். இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா புடவைகள், ஒரு பை (bag) , உணவு தானியங்கள் வழங்கப்படும். அந்த புடவை வைக்கப்பட்டுள்ள பையில் பிரதமர் நரேந்திர மோதியின் படம் இருக்கும்.

புடவைகளை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, சொந்தமாக புடவையை வாங்குவதற்கான வழிவகைகளை அரசு செய்ய வேண்டும் என்கின்றனர் இந்த பெண்கள்.

அந்த்யோதயா திட்டத்தின் கீழ், மிக ஏழ்மையான நிலையிலுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சலுகை விலையில் 35 கிலோ அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இலவச புடவைகள் வழங்கப்பட்டதில்லை.

இந்த பகுதியில் வார்லி பழங்குடியினரும் கட்காரி பழங்குடியை சேர்ந்த சிலரும் வசிக்கின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினசரி பயன்பாட்டுக்கு 6 கஜ புடவைக்கு பதிலாக 9 கஜ புடவைகளையே பயன்படுத்துகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே சில நோக்கங்களுக்காக புடவைகள் வழங்கப்பட்டுள்ளதாக பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு அதிகாரிகள் கேமரா முன்பு கருத்து கூற மறுத்துவிட்டனர். எனினும், பெண்களின் இந்த போராட்டம் எந்த குறிப்பிட்ட அமைப்பாலும் நடத்தப்படவில்லை என, மாவட்ட ஆட்சியர் கோவிந்த் போட்கே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். சில பெண்கள் அலுவலகத்திற்கு வந்து புடவைகளையும் பைகளையும் (bags) திருப்பி அளித்தனர். இத்தகைய பரிசுகள் தங்கள் பகுதியில் உண்மையான வளர்ச்சிக்கு எந்த பங்கையும் செலுத்தாது எனக்கூறி ஒரு கடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

பெருநகரமான மும்பைக்கு மிக நெருக்கமாக இருந்தபோதிலும், பால்கர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்று சேரவில்லை.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், தண்ணீர் பற்றாக்குறை, குடிநீருக்கான தினசரி போராட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளுடன் இக்கிராம மக்கள் மின் விநியோகத்திலும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.