தமிழர் பகுதியொன்றில் இரு சர்வதேச மைதானங்கள்!

0
44

யாழ். செம்மணி பகுதியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

யாழை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்து மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்டமுன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

முன்பதாக இவ் விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குறித்த பகுதிக்கு கள விஜயம் சென்ற அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், கோப்பாய் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் உடனிருந்தனர்.