ஐ.தே.க. சார்பில் ரணில் போட்டியிட மாட்டார்: கைகொடுக்குமா சர்வதேச நாணய நிதியம்?

0
58

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற குழப்பம் உருவாகியுள்ள சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளார்.

அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டக் கொடுப்பனவு ஜூலை மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

அந்தக் கொடுப்பனவு கிடைத்த கையோடு நிவாரணங்களை வழங்கி ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது.

செப்டெம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதியை அண்மித்த தினத்தில் தேர்தலை நடத்தவே ரணில் விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் எனவும், பொது வேட்பாளராகவே களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.