கச்சத்தீவை மீட்க இந்திய அரசு நடவடிக்கை: இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை

0
53

“இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கும் முக்கியப் பங்கு உள்ளது” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை:- இதுவரை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய்யான தகவல்களையே கூறியுள்ளனர்.

திமுகவினர் ஏமாற்றியுள்ளனர்

தங்களுக்கு தெரியாமலே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவும், இதைக் கண்டித்து கண்டனப் போராட்டங்கள் நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

கருணாநிதியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசியுள்ளனர்

கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியை மட்டுமே திமுக குறை கூறிவந்துள்ளது. இதில் திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

இச்சம்பவத்தின்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்தே தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் மற்றும் திமுக, பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை. 1974ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது

ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் குறிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கச்சத்தீவை கொடுப்பது குறித்து பேசலாம். இப்போது வேண்டாம் என கருணாநிதி கேட்டுள்ளார். பின் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்கு கருணாநிதி சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறி 21 முறை கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், வெளியுறவத் துறை அமைச்சகமும் ஆராய்ந்து வருகின்றன. பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும் காங்கிரஸ் மற்றும் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்தியாவில் பூதாகரமாகியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

இலங்கையின் தேர்தல் மேடைகளிலும் கச்சத்தீவு விவகாரம்

கச்சத்தீவை இந்தியா மீண்டும் மீட்கும் என பாஜக கூறியுள்ளமை இருநாட்டு அரசியலில் சலசலப்பையும் கருத்து முரண்பாடுகளையும் எதிர்காலத்தில் உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கையிலும் விரைவில் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இலங்கையின் தேர்தல் மேடைகளிலும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக மாறும் நிலை தோன்றியுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை இந்திய தலைவர் சந்திக்கும் தருணங்களிலும் கச்சத்தீவு விவகாரம் பிரதான பேசுபொருளாகும். ஆளும் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளமை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.