பல்கலைக்கழக மாணவி கொலை: 40 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் அடையாளம்

0
59

40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஓரிகான் மாநிலத்தில் வசித்து வந்த பார்பரா டக்கர் என்ற 19 வயது பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்.

கொலையில் சரியான சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக அவரது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலில் இருந்த விந்தணுக்களில் டிஎன்ஏ சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

சரியான சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதில் சிரமத்துடன் விசாரணை அறிக்கைகள் 2000 ஆம் ஆண்டில் ஆய்வுக்காக ஒரேகான் மாநில பொலிஸ் குற்றவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, குற்றவியல் ஆய்வகத்தின் ஆய்வில் டிஎன்ஏ தரவுகள் ஒரு குறிப்பிட்ட நபரின் டிஎன்ஏ தரவுகளுடன் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஒரு நாள் சந்தேக நபர் சூயிங்கம் துண்டு ஒன்றை சாலையில் எறிந்தார், இதனை கைப்பற்றிய பொலிஸார் குற்றவியல் ஆய்வகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

அதன்படி சூயிங்கில் கிடைத்த உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ சோதனை தரவுகள் பார்பரா டக்கரின் உடலில் கிடைத்த விந்தணுவின் டிஎன்ஏ தரவுகளுடன் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன்படி சந்தேகநபரான ரொபர்ட் பிளம்ப்டன் 2021 ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 60 வயதான ரொபேர்ட் பிளம்ப்டன் முதலாம் தரக் கொலைக்கான ஒரு குற்றச்சாட்டிலும் இரண்டாம் நிலை கொலைக்கான நான்கு குற்றச்சாட்டுக்களிலும் அண்மையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தனது கட்சிக்காரர் சார்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஜூன் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.