காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?: கண்டுகொள்ளாத அரசாங்கம்; 7 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்!

0
107

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (20) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்த பேரணியை கிளிநொச்சி நகர் வரை ஊடாக ஊர்வலமாக சென்றனர். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யுத்தத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச நாடுகள் தடையிட்டு நீதிவழங்க வேண்டும்

போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கே.கனகரஞ்சனி கருத்து வெளியிடுகையில், “யுத்தத்தின் போது காணாமல் போன எமது உறவினர்களைக் கண்டறியும் போராட்டம் தொடங்கி ஏழு வருடங்கள் கடந்தும் இதுவரை எமக்கு நீதி கிடைக்கவில்லை”

“யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் போரின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க இதுவரை நியமிக்கப்பட்ட எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.”

“எந்த அரசாங்கமும், எந்த ஆட்சியாளரும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை, எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க மட்டுமே நாங்கள் கேட்கிறோம்.” என்று கூறினார்.

ஏழு வருடங்களாக கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் அமர்ந்து எமது உறவினர்களை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம்.ஆனால் இது வரை எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

“இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையின் போது தென்னாப்பிரிக்காவும் மற்ற நாடுகளும் தலையிட்டு அந்தப் போரின்போது காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு நியாயமான பதிலைக் கொடுக்க வழி செய்தன.

இந்நிலையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

செவிசாய்க்காத அரசாங்கங்கள்…

இதனிடையே, நம் நாட்டின் தலைவர்கள் உருவாக்கும் பொய்யான திட்டங்களால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்ப முடியாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ஏ.லீலாவதி தெரிவித்தார்.

“காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லி, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஒரு அலுவலகத்தை அரசு நிறுவியது.

வேறு பல நிறுவனங்களை உருவாக்கி, காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை நாம் எந்த நன்மையையும் அடையவில்லை.”

தற்போது யுத்தம் நிறைவடைந்து மூன்று அரசாங்கங்கள் ஆட்சி செய்த போதிலும், இந்த அரசாங்கங்கள் எதுவும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கவில்லை.

“காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் கோரிக்கைகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். அதற்கு நீதி வழங்க மாட்டார்கள்.

வீதியில் தவிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர்களும் தலையீடு செய்யவில்லை

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவர் கே.ராஜ்குமார் தெரிவிக்கையில், “காணாமல் போனோர் பிரச்சினை போன்ற தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஒவ்வொரு அரசாங்கமும் தவறிவிட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரி, தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோதும் கோரிக்கைகளை முன்வைத்தோம், ஆனால் இன்று வரை நீதி வழங்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் தலையிட்டு யுத்தத்தின் போது காணாமல் போன வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கண்டறிந்து நீதி வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு பதில் வழங்குவதாக அரசாங்கம் பல தடவைகள் அறிவித்தும் இதுவரையில் தமது பிரச்சினைக்கான பதில் கிடைக்காதது வேதனையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய முறையில் தலையீடு செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

சர்வதேசம் தலையிட்டு தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய குறிப்புகளோ, உரிய விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.