தமிழரசுக் கட்சியை அழிக்கும் சதித் திட்டம் வெற்றி பெறாது; பதவி ஆசைக்கு இடமில்லை – சம்பந்தன்

0
95

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலையில் நடத்தும் முயற்சிக்கு எதிராக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் நேற்று வியாழக்கிழமை இடைக்காலக் கட்டாணை வழங்கித் தடை விதித்தது.

கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையை சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தத் தெரிவு கட்சியின் யாப்புக்கு முரணானது என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியே திருமலை மற்றும் யாழ்.மாவட்ட நீதிமன்றங்கள் மேற்படி உத்தரவை பிறப்பித்தன.

மற்றுமொரு மனுத் தாக்கல்

கடந்த மாதம் 21 ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்ட முடிவுகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடக் கோரியும், அக்கூட்ட முடிவுகளை இரத்துச் செய்யுமாறு அறிவிக்கக் கோரியும் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என தெரிய வருகிறது.

நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவுகள் தமிழர் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

பொதுச் சபைக் கூட்டத்தில் கட்சியின் யாப்பின் பிரகாரம் 161 பேர் மாத்திரமே வாக்களிக்க முடியும் என சில சட்டத்தரணிகள் தெரிவிப்பதுடன், ஆனால், அது கட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த நடைமுறை என்றும் தற்போது 77 வருடங்கள் கடந்துள்ளன. அதற்கேற்ப 332 பேர் பொதுச் சபை உறுப்பினர்களாக உள்ளதாக சில சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றங்களின் உத்தரவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன், ”தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது,

நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். பதவி ஆசையில் இந்த சதியை இவர்கள் செய்கின்றனர். அவர்களின் சதித்திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என்றார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்.” என மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.