தொழிற்சாலையில் வெடிவிபத்து – 11 பேர் பலி: விரிவான விசாரணைக்கு மத்தியப் பிரதேச முதல்வர் உத்தரவு

0
118

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹர்தாவிலுள்ள கேளிக்கை வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள நர்மதாபுரம் மாவட்டத்திலும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.

விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவு

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்னுமே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டவர முடியாத நிலையும் அங்கு காணப்படுகின்றது. இதனால் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி, இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு உடடினயாக சென்று பார்வையிடுமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.