இலங்கையில் விடுமுறையை கழியுங்கள்: சீனாவுடனான அரசியல் போட்டி இயல்பானது; ஜெய்சங்கர் கூறுவது என்ன?

0
169

சீனா இந்தியாவின் அண்டைய நாடு என்பதால் இயற்கையாகவே இருநாடுகளுக்கும் இடையில் போட்டி அரசியல் நிலவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய ஜெய்சங்கர்,

“எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டிருந்தது.

உலகமே பின்வாங்கிய போது இந்தியா 4.5 பில்லியன் டொலர் உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. இது IMF இன் உதவிப் பொதியை கூட 50 வீதம் அதிகமாகும்.

உங்களுக்கு எனது முதல் அறிவுரையானது அடுத்த முறை நீங்கள் விடுமுறை எடுக்க விரும்பினால் இலங்கைக்குச் செல்லுங்கள். அங்குள்ள சராசரி மனிதர்களிடம் பேசுங்கள். இந்தியாவைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். அந்த பதிலைக் கொண்டு இந்தியா வளர்வதை உணர்வீர்கள்.” எனவும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு உட்பட பிராந்தியத்தின் புவிசார் அரசியல் யதார்த்தங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“சீனா எமது அண்டை நாடு, மற்றும் போட்டி அரசியலில் இயற்கையாகவே பங்கு வகிக்கும். ஆனால் நாம் பயப்படக் கூடாது. உலகளாவிய அரசியல் ஒரு போட்டி விளையாட்டு. நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.” எனவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு அதன் அர்ப்பணிப்பை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.