வணிக ஸ்தாபனத்தில் வற் பதிவுச் சான்றிதழை தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம்!

0
136

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் பதிவுச் சான்றிதழை, வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கிளைகளுக்கு, பிரதேச சபையினால் வழங்கப்படும் சான்றிதழின் நகலை காட்சிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், கேள்வி மனுக்களின் ஊடாக ஒப்பந்தங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் பொருட்களை விநியோகிப்போர் தங்கள் பதிவு எண்ணை விற்பனை சீட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரிஎல்ல, வற் வரி அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கு சில வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் வற் வரியினை அறவிடுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அவ்வாறு அறவிடப்படுவதானது நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் 30 மற்றும் 31 ஆம் சரத்துகளுக்கு அமைய, தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டார்.

எனவே, வற்வரி அதிகரிப்புக்கு முன்னர் இருந்த விலையினையும், அந்த வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் உள்ள விலையினையும் பொருட்களில் காட்சிப்படுத்துவது அவசியமாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரிஎல்ல தெரிவித்தார்.