தனுஷ்கோடி – தலைமன்னார் கடல் பாலம்.., இந்திய அரசின் அறிவிப்பு

0
167

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் கடந்த 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட Atal Setu Bridge சமீபத்தில் திறக்கப்பட்டது. கடலில் மட்டும் சுமார் 16.5 கி.மீ தூரம் கட்டப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றது.

அந்தவகையில், இந்தியாவின் சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன்படி மற்றொரு அறிவிப்பையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா – இலங்கை இடையே கடல் பாலம்

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கும், குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதனால் போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும் என்றும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பாலம் அமைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். தற்போது, பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.