தொலைக்காட்சி நேரலையில் நடுவிரல் காட்டிய பெண் செய்தியாளர்; வீடியோ வைரலானதில் மன்னிப்பு

0
132

நேரலை செய்தி ஒளிபரப்பின்போது, பிபிசி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் விளையாட்டாய் நடுவிரல் காட்டியதில் சர்ச்சைக்கு ஆளானார். அந்த வீடியோ வைரலானதில், பின்னர் அது குறித்து விளக்கமும் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது. ஒரு வீடியோ 700,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

கிறிஸ் ரோஸ் என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அது வைரலானது. பலர் அவரது தொழில்முறை பற்றி கேள்வி எழுப்பினர்.

சர்வதேசளவில் பிரபல ஊடகமான பிபிசி தொலைக்காட்சியில் புதன் அன்று செய்தி ஒளிபரப்பின்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பிபிசியின் தலைமை தொகுப்பாளராக இருக்கும் மரியம் மோஷிரி என்பவர், நண்பகல் செய்திகளை வழங்கத் தயாராக இருந்தபோது, நேயர்கள் அதிர்ச்சியடையும் வகையில் ​​தனது விரலைக் காட்டினார்.

ஆபாச செய்கையாக வர்ணிக்கப்படும் இதனை நேரலையில் ஒரு செய்தி வாசிப்பாளர் அடையாளம் காட்டியது, பிற்பாடு வீடியோ துணுக்காக சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சைக்கு வித்திட்டது. வழக்கமான பிபிசி கவுன்ட் டவுன் 10-லிருந்து பூஜ்ஜியத்தை தொட்டதும், திரையில் செய்தி வாசிப்பாளர் மோஷிரி தோன்றுகிறார். அந்த கணம் அவர் தனது தலையை சாய்த்து, கண்கள் விரித்து, குறும்பு புன்னகையுடன் நடுவிரல் காட்டுவது தோன்றுகிறது. அனுபவமிக்க அந்த செய்தியாளர் உடனே சுதாரித்து, செய்திகள் வாசிப்பதை தொடர்கிறார்.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவை முன்வைத்து பலரும் பலவிதமான விவாதங்களை எழுப்பினர். வழக்கமான சாடல்களுக்கு அப்பால் சிலர், செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் பணியிட விரக்தி குறித்து குசலம் விசாரித்தார்கள். சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் பெண் செய்தியாளர் மோஷிரி தனது ட்விட்டர் கணக்கு வாயிலாக பின்னர் விளக்கமும் அளித்தார். அதில் மன்னிப்பையும் கோரியிருந்தார்.

“அனைவருக்கும் வணக்கம். நான் கேலரியில் இருந்த டீமுடன் கொஞ்சம் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தேன். இயக்குனர் 10லிருந்து 0 வரை கவுன்ட் டவுன் எண்ணிக்கொண்டிருந்தபோது, அவருக்கு இணையாக நானும் எண்ணுவது போல் விரல்களை ஒவ்வொன்றாக மடித்து நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி 1-க்கு வந்தபோது நான் நகைச்சுவையாக விரலைச் சுழற்றினேன். இது கேமராவில் பிடிபடும் என்பதை உணரவில்லை. இது தனிப்பட்ட எங்கள் குழுவுடன் மேற்கொண்ட நகைச்சுவை மட்டுமே. அது ஒளிபரப்பில் சேர்ந்ததுதற்கு மிகவும் வருந்துகிறேன். இதனால் எவரேனும் புண்பட்டிருப்பின் என்னை மன்னிக்கவும்” என்று மோஷிரி விளக்கம் அளித்துள்ளார்.

பிபிசி செய்தி கூட இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. மூன்று குழந்தைகளின் தாயான மோஷிரி, பிப்ரவரியில் பிபிசி தனது இரண்டு செய்தி சேனல்களை இணைத்தபோது, சேனலின் தலைமை தொகுப்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

X இல் அவரது மன்னிப்பு இடுகை சில மணிநேரங்களில் 2.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது மற்றும் கிட்டத்தட்ட 3,000 கருத்துகளைப் பெற்றது. பலர் அதை நகைச்சுவையாக புரிந்து கொண்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.