ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்ய திமுக ஒப்புக் கொண்டதா? தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்ட கருத்து

0
155

“பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்” என தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தமிழச்சி தங்கபாண்டியனிடம் “வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால் யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதலளித்துள்ளார்.

கடந்த 2009 இல் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகள் அமைப்பிற்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அப்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியே இடம்பெற்றது.

இந்தியாவின் இராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும் அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவரை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை பலர் கண்டித்துள்ளனர். மேலும் இந்த பதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.