TikTok செயலிக்கு தடைபோட்ட நேபாளம்

0
196

நேபாளத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக தெரிவித்து டிக்டொக் (TikTok) செயலி தடை செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தொடர்பு அலுவலகங்களை நிறுவ வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தபட்டு சில நாட்களில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாதாந்தம் ஒரு பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள டிக்டொக் செயலி இந்தியா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் தடை

அதற்கமைய, இவ்வருடம் அமெரிக்காவில் மொன்டானா மாநிலம் முதன் முதலில் டிக்டொக்கை தடை செய்த அதே நேரத்தில் பிரித்தானிய நாடாளுமன்றமும் அதன் வலையமைப்பில் இருந்து தடை செய்தது.

நோபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா ஷர்மா பிபிசியிடம் தெரிவிக்கையில் ,

TikTok செயலிக்கு தடைபோட்ட மற்றுமொரு நாடு | Nepal Has Banned The Tiktok App

இந்த தளம் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை பரப்புகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும். இந்த தீர்மானத்தை அமல்படுத்த தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ககன் தாபா, டிக்டொக்கிற்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது கருத்து சுதந்திரத்தை தடுக்கும் முயற்சி என்றும், தளத்தை ஒழுங்குபடுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை டிக்டொக் செயலி பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை இணைப்பது குறித்தும் உலகளவில் கவலைகள் அதிகரித்து வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை விட டிக்டொக் பின்தங்கி காணப்பட்டாலும், டிக்டொக் இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ளது. நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600க்கும் மேற்பட்ட டிக்டொக் தொடர்பான சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிபிசியின் அறிக்கையின்படி, நேபாளத்தில் தேசிய அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களின் பட்டியலில் டிக்டொக் மூன்றாவது இடத்தில் உள்ளது. இணைய பயனர்களில் அனைத்து வயதினரிடையே யூடியூப் மற்றும் பேஸ்புக் பிரபலமாக இருந்தாலும், 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான இளைய வயதினரிடையே டிக்டொக் மிகவும் பிரபலமாக உள்ளது.

கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஒன்லைன் ஷாப்பிங் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 2020 முதல் பாகிஸ்தான் குறைந்தபட்சம் நான்கு முறை இந்த செயலியை தற்காலிகமாக தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.