வலியோடு வரலாறு படைத்த மேக்ஸ்வெல்

0
213

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ஓட்டங்களை விளாசியது நம்ப முடியாத அளவிலான அற்புதமான, ஆக்ரோஷமான மட்டைவீச்சாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் 292 ஓட்டங்கள் இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்து தோல்வியின் பிடியில் சிக்கி இருந்தது.

மேக்ஸ்வெல் களமிறங்கிய போது அவுஸ்திரேலிய அணி 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. ஓமர்ஸாய் அடுத்தடுத்து வீசிய பந்துகளில் டேவிட் வார்னர், ஜோஷ் இங்கிஷை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

இதனால் ஓமர்ஸாயின் ஹாட்ரிக் வாய்ப்பை முறியடிக்க வேண்டிய நிலையில் இருந்தார் மேக்ஸ்வெல். அதை கடந்து சென்ற அவர் வழக்கத்துக்கு மாறான முறையில் நிதானம் காட்டினார். இதற்கிடையே மார்னஷ் லபுஷேன், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் ஸ்டார்க் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை ஹஸ்மதுல்லா ஷாகிதி நழுவவிட்டார். நூர் முகமதுவின் அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல்லின் கால்காப்பை பந்து தாக்க நடுவர் அவுட் கொடுத்தார்.

எனினும் குழப்பமான நிலையில் மேக்ஸ்வெல் மேல்முறையீடு செய்தார். நிச்சயம் அவுட்டாகவே இருக்கும் என பெவிலியனுக்கு திரும்ப அடிவைத்த நிலையில் மேல்முறையீட்டில் அவுட் இல்லை என தெரிந்ததும் பெருமூச்சுவிட்டார்.

இதே ஓவரில் மெக்ஸ்வெல் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது ஃபைன் லெக் திசையில் முஜீப் உர் ரஹ்மான் கேட்ச்சை தவறவிட்டார். இரு முறை தப்பித்த மேக்ஸ்வெல் அதன் பின்னர் எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார்.

51 பந்துகளில் அரை சதம் அடித்த மேக்ஸ்வெல் அதன் பின்னர் 77 பந்துகளில், 150 ஓட்டங்களை வேட்டையாடி தோல்வியின் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்த ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்ததோடு இல்லாமல் அரை இறுதி சுற்றில் நுழையவும் வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில், அதுவும் உலகக் கிண்ண தொடரில் இரட்டை சதம் விளாசிய முதல் அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ள மேக்ஸ்வெல், போட்டியின் போது ஏற்பட்ட காயங்களுடன் போராடியது அவரது மனவலிமையை வெளிப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் முதுகு வலியுடன், காலில் தசை பிடிப்பும் சூழ்ந்துகொள்ள மைதானத்தின் தரையில் துடித்தார் மேக்ஸ்வெல். எனினும்வலியும், வேதனையும் அணியின் வெற்றிக்கோட்டை கடக்கச் செய்வதற்கு தடையாக இருக்க அவர், அனுமதிக்கவில்லை.

வலி அதிகமானதால் ரன்கள் ஓட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் மேக்ஸ்வெல், சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பந்தை தெறிக்கவிட்டார். இறுதிக்கட்டத்தில் வெற்றிக்கு 55 ஓட்டங்கள் தேவையாக இருந்த நிலையில் மேக்ஸ்வெல் பின்னங்காலை நகர்த்துவதற்கே சிரமப்பட்டார். அந்த சூழ்நிலையில் ‘ஸ்கூப் ஷாட்’ சிலவற்றை கையாண்டு பவுண்டரிகள் விளாசினார்.

இந்த வெற்றியில் மேக்ஸ்வெல்லை போன்று தலைவர் பாட் கம்மின்ஸுக்கும் அதீத பங்கு உள்ளது. ஏனெனில் மறுமுனையில் அவர், விக்கெட் சரியாமல் பந்துகளை தடுத்தாடி மேக்ஸ்வெல் மட்டையை சுழற்றுவதற்கு அனைத்து வகையிலும் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 68 பந்துகளை எதிர்கொண்டு கம்மின்ஸ் சேர்த்த 12 ஓட்டங்களும் முக்கியத்துவம் பெற தவறவில்லை.

காவியமாக அமைந்த மேக்ஸ்வெல்லின் ஆட்டம் 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியாவின் கபில்தேவ் ஆடிய ருத்ரதாண்டவத்தை கண் முன் நினைவுக்கு கொண்டு வந்தது.

40 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்திய அணி 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் கபில்தேவ் 175 ஓட்டங்கள் வேட்டையாடி அணியை கரை சேர்த்திருந்தார். அதேபோன்ற ஒரு அதிர்வை வான்கடே மைதானத்தில் நிகழ்த்தி உள்ளார் மேக்ஸ்வெல்.

அன்று கபில்தேவ், இங்கிலாந்தில் தொழில் முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வலுவாக இருந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார்.

இப்போது உலகம் முழுவதும் டி 20 லீக்கில் விளையாடி பிரபலமாக உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போர் வீரராக வாகை சூடி உள்ளார் மேக்ஸ்வெல். போராட்டம் மிகுந்த இந்த இரு இன்னிங்ஸ்களுக்குமான ஒற்றுமை இதோடு நிற்கவில்லை.

அன்று கபில்தேவ் பேட்டிங்கில் காட்டிய தாண்டவத்தை ஒட்டுமொத்த இந்திய அணியினரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதேபோன்று மேக்ஸ்வெலின் வாண வேடிக்கைகளை வீரர்களின் ஓய்வு அறையில் இருந்தபடி கண் இமைக்காமல் அவுஸ்திரேலிய வீரர்கள் பார்த்துள்ளனர்.

இறுதியாக முஜீப் உர் ரஹ்மானின் பந்தை சிக்ஸருக்கு விளாசி வெற்றியை முத்தமிட்ட போதுதான் ஆஸ்திரேலிய வீரர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

மேக்ஸ்வெல்லின் வலிமிகுந்த போராட்டமும், அவரது மட்டை வீச்சும் இந்த போட்டியை கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த போட்டியாக மாற்றி உள்ளது. வலியோடு வரலாறு படைத்த மேக்ஸ்வெல் சாத்தியமே இல்லாத வகையில் விளையாடி கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்துள்ளார்.