‘இலங்கை பாராளுமன்றம்’ கோமாளிகள் கூடாரமாக மாறிவருகிறது; சிறிதரன் கவலை

0
126

இலங்கை பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இலங்கை பாராளுமன்றம் தற்போது கோமாளிகளின் கூடாரமாக மாறி வருகிறது. நாட்டில் அதிகமானவர்கள் ஒருவேளை உணவை உண்ணும் நிலைமையே காணப்படுகிறது.

சிலர் ஒருவேளை உணவைக்கூட உண்ண முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்தளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

இந்த நிலைமை மேலும் தொடருமாயின் சோமாலியாவை விட எமது நாடு படு பாதாளத்திற்குச் சென்றுவிடும். ஆனால் பாராளுமன்றத்தில் இவற்றுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவும் வைத்தியசாலைகளின் தேவைகளுக்காகவும் மீன் வகைகளை இறக்குமதி செய்வதாக கடல்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் உள்ள மீனவர்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையிலும் வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடற்தொழில் அமைச்சர் செயற்படுவது அம்மக்களை மேலும் பாதிக்கும்.” – எனவும் தெரிவித்தார்.