மக்களுக்கு சேவை செய்ய முடியாத அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்: பழனி திகாம்பரம்

0
231

மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சுப் பதவியை நான் இப்போதைக்கு பொறுப்பெடுக்க மாட்டேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்,

“எனது இருபது வருட மலையக அரசியல் வரலாற்றில் மாகாண சபை உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக அமைச்சராக படிப்படியாக பதவி நிலை பெற்று மக்களுக்கு ஏற்ற வகையில் சேவையாற்றி இருக்கிறேன்.

நல்லாட்சி காலத்தில் நான் ஏற்றுக் கொண்ட அமைச்சு பதவி மூலமாக மலையகத்தில் இதுவரை எவரும் செய்ய முடியாத அபிவிருத்தி திட்டங்களை செய்து காட்டினேன்.

Palani Theekambaram

அதனால் தான் மக்கள் இன்னும் அந்த அபிவிருத்தி திட்டங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்வோடு நான் என்றும் செயற்பட்டது கிடையாது.

மக்களைப் பிரித்தாளும் தந்திரம் என்னிடம் கிடையாது. எனது அரசியலில் ஒவ்வொரு தீர்மானத்தையும் மக்களின் மனம் அறிந்து தான் எடுக்கிறேன்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றைப் பொறுப்பு எடுக்குமாறு எனக்கு பலமுறை அழைப்பு வந்த போதும் நான் அதனை நிராகரித்து விட்டேன்.

அமைச்சுப் பதவி ஒன்றைப் பொறுப்பெடுத்தால் அந்த அமைச்சு பதவியின் ஊடாக மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பெடுப்பதில் எந்தப் பயனும் இல்லை.

எனவே எதிர்காலத்தில் வரும் புதிய அரசாங்கத்தில் நிச்சயமாக அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்று மக்களுக்கு உரிய வகையில் சேவை செய்ய எதிர்பார்த்திருக்கிறேன். அதுவரை எனது மக்கள் பொறுமைக் காக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.