காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் OCI அட்டைகள் இரத்து

0
219

கனேடிய சீக்கியரான காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் பிரதநிதி குருபத்வந்த் சிங் பனூனின் சொத்துகளை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைப்பற்றி முடக்கியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளின் பிரதிநிதிகளின் சொத்துக்களைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு இந்திய மத்திய அரசாங்கம், விசாரணை அமைப்புகளை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை அடையாளம் காணவும் அவர்கள் இந்தியாவுக்குள் வருவதை தடுக்க அவர்களின் நாடு கடந்த இந்திய குடியுரிமையை (ஓசிஐ) இரத்து செய்யுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியான மாநிலம் சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பனூனின் சொத்துக்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவைச் சேர்ந்த இந்த பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைக்காது எனவும் இதன் பின்னர் அவர்கள் இந்தியாவுக்குள் வர வாய்ப்பில்லை எனவும் இந்திய அரசு நம்புகிறது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் தலைமறைவாக உள்ள 19 காலிஸ்தான் பிரிவினைவாதிகளை இந்திய அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் இதற்கு முன்னர் வசித்து வந்த 11 பிரிவினைவாதிகளை இந்திய பாதுகாப்பு தரப்புகள் அடையாளம் கண்டுள்ளன. இவர்களில் எட்டு பேர் கனடாவில் இருப்பதாக கூறப்படுகிறது.