கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்தின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இது தொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது.
மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா – இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது,
“இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.
இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.