விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பு

0
205

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் சாரங்களை சட்டமா அதிபருக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். எனினும் அவரின் சட்ட ஆலோசனைகள் இன்னும் தாம் பெறவில்லை எனவும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அறிக்கையொன்றின் மூலம் சமூகங்களுக்கு மத்தியில் அதிருப்தியை தூண்டும் வகையில் அல்லது தூண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சட்டமா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஆலோசனை

இதேவேளை இந்த விடயம் தொடர்பான ஆலோசனைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் விசாரணை 2024 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பு | Controversial Comment Made Vijayakala Maheswaran

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை காண விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

சிங்கள ராவயவின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரரின் முறைப்பாட்டிற்கு அமைய, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.