11 ஆண்டுகளுக்கு பிறகு என் மீதான அவதூறு வழக்கை தூசி தட்டி எடுப்பது ஏன்? – சீமான் கேள்வி

0
274

‘ஒரே நாடு எனப் பேசும் பா.ஜ.க, காவிரியில் நீர் திறப்பு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அப்போது ஏன் தேசியமாக பார்க்காமல் மாநிலத்தை மட்டும் பார்த்தீர்கள்? காவிரியில் நீரை திறக்க போராட வேண்டியதுதானே’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக திருப்பூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

11 ஆண்டுகளுக்கு பிறகு என் மீதான அவதூறு வழக்கை தூசி தட்டி எடுப்பது ஏன்? தேர்தல் நேரத்தில் எனது தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் வீண்பழி சுமத்தப்படுகிறது. எனக்கு ஒரு குடும்பம், இரு குழந்தைகள் இருக்கின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களும் கனவும் இருக்கிறது.

அவர் இதேபோன்ற குற்றச்சாட்டை எனக்கு முன்பாக 5 பேர் மீதும் சுமத்தியுள்ளார். எனவே தயவு செய்து இதனை விட்டுவிடுங்கள். யார் மீது புகார் கொடுத்தாலும் விசாரிப்பது போலீசாரின் கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள். அதற்காக அஞ்சுபவன் நானல்ல.

ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. இதனால் நாட்டிற்கு என்ன ஆகிவிடப்போகிறது? மத்திய அரசு கலைந்துவிட்டால் பார்லிமென்டிற்கு மட்டும் தேர்தல் வைப்பீர்களா? அல்லது அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு மீண்டும் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் வைப்பீர்களா? இது தேவையில்லாத செலவு தானே. அப்புறம் எப்படி தேர்தல் செலவு மிச்சமாகும்? இங்கு ஒரே சமூகத்திலேயே பல கலாச்சார மாறுபாடுகள் இருக்கும்போது எப்படி ஒரே நாடு ஒரே சட்டம் இருக்கும்?

ஒரே நாடு எனப் பேசும் பா.ஜ காவிரியில் நீர் திறப்பு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அப்போது ஏன் தேசியமாக பார்க்காமல் மாநிலத்தை மட்டும் பார்த்தீர்கள்? காவிரியில் நீரை திறக்க போராட வேண்டியதுதானே. கர்நாடகாவில் அவர்களின் மாநில நலனுக்காக காங்கிரசும், பா.ஜ.,வும் தண்ணீர் தர மறுக்கிறது. ஆனால் இங்குள்ள திமுக.வும், அதிமுக.வும் இந்த இரு கட்சிகளை தோளில் தூக்கி சுமந்து வருகின்றன” என்றும் அவர் கூறினார்.