ஜி-20 மாநாட்டில் நிறுவப்படவுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை!

0
215

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி -20 மாநாட்டில் வரவேற்பு திடலில் வைக்க நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. செப்படம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை டெல்லியில் ஜி -20 மாநாடு இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் 19 டன் எடை, 28 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான நடராஜர் சிலை வரவேற்பு திடலில் வைக்கப்படவுள்ளது. குறித்த சிலை 22 அடி உயரத்திலும், பீடம் 6 அடி என 28 அடியில் காட்சியளிக்கிறது.

இந்த நடராஜர் சிலை தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு மற்றும் துத்தநாகம் என்ற எட்டு வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்ட வெண்கல சிலையாகும். நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் என்று தமிழகத்தில் ஐந்து சபைகள் இருக்கின்றன.

திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் கனகசபை அதாவது பொற்சபை மதுரையில் ரஜதசபை அதாவது வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்று சிவபெருமான் ஐந்து இடங்களில் நாட்டிய கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த சபைகளில் மதுரையில் உள்ள வெள்ளி சபையில் மட்டுமே சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நாட்டியம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்த நாட்டியக் கோலத்தில்தான் தற்போது குறித்த நடராஜர் சிலை வடிகமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜி-20 மாநாட்டில் நடராஜர் சிலையை வைத்து அலங்கரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையடுத்து, சோழர்கால கலை நயத்துடன், சுமார் 10 கோடி ரூபாய் செலவில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.