குறைந்தளவில் நாணயங்களை வெளியிடும் இலங்கை மத்திய வங்கி

0
204

இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம் வருடாந்த புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் தொகையை கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 வீதத்தால் குறைத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் நாணயம் மற்றும்  சட்டங்களின்படி நாட்டு மக்களுக்கு தற்போதைய நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு பொறுப்பு, அதன் நாணயத் திணைக்களத்தால் நிறைவேற்றப்படுவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய வங்கி பொறுப்புக்களை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்

இதற்கமைய நாணயத் திணைக்களம் கடந்த 2018ஆம் ஆண்டில் 796.5 பில்லியன் ரூபாயையும் 2019ஆம் ஆண்டில் 776.2 பில்லியன் ரூபாயையும் 2020ஆம் ஆண்டில் 697.3 பில்லியன் ரூபாயையும் 2021ஆம் ஆண்டில் 390.9 பில்லியன் ரூபாயையும் 2022ஆம் ஆண்டில் 385.5 பில்லியன் ரூபாவையும் வெளியிட்டதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பொன்று நீர்கொழும்பு ஹெரிடேஜ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற போதே, இவற்றை தெரிவித்தார்.

சட்ட மற்றும் தொழில்நுட்ப விடயங்களை உள்ளடக்கிய மேற்படி விடயங்களில் முடிவெடுக்கவோ அல்லது தலையிடவோ அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ அதிகாரம் இல்லையெனவும், அமைச்சர் வலியுறுத்தினார்.

இவ்வாறான நிலையில் செயற்படும் சுயாதீன நிதி நிறுவனமான இலங்கை மத்திய வங்கிக்குள் சில குழுக்கள் பலவந்தமாக அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான முரண்பாடான செயற்பாடுகளை முன்னேறிய மற்றும் அறிவார்ந்த சமூகம் கண்டிக்க வேண்டுமென்றும் மத்திய வங்கி தனது அரசியலமைப்பு பொறுப்புகளை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுமென்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.