7 சிசுக்களை கொலை செய்த தாதி; உறுதி செய்த நீதிமன்றம்

0
185

பிரித்தானியாவில் மகப்பேறு வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் செவிலியர் ஒருவா் மீது 7 சிசுக்களை கொன்றதாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்றதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

லூசி லெட்பி என்ற அந்த 33 வயது பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் வைத்தியசாலையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி பணியாற்றிய காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறுப் பிரிவில் சிசிக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.

வைத்தியசாலையலில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக பொலிஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா்.

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சந்தேகநபர்

அந்த விசாரணையின்போது, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் இல்லத்திலிருந்து பறிமுதல் செய்த பொலிஸாா், அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இந்த சிசுக்களின் இறப்புகளுக்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை அவா் எழுதியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதையடுத்து, லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை தற்போது வெளியிடவுள்ள நீதிபதிகள், லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 7 சிசுக்களைக் கொன்றது, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றது ஆகியவை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்த நிலையில் அவா் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “லூசி லெட்பி ஒரு அப்பாவி” என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவா் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணா்ச்சியில் அந்தக் குறிப்புகளை தனக்குத் தானாக எழுதியிருந்ததாகவும் கூறினாா்.

எனினும், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தற்போது அவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, லூசி லெட்பிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

எனினும் இந்த வழக்கில் தண்டனையை நீதிபதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21.08.2023) அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.