கொழும்பில் இந்திய முக்கியஸ்தரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

0
190

ரணில் விக்ரமசிங்கவும், நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்ட கூட்டத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்றைய தினம் (01.08.2023) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (01.08.2023) நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்தியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொழும்பில் இந்திய முக்கியஸ்தரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! காரணத்தை வெளிப்படுத்திய செல்வம் எம்.பி | Tna And Indian Ambasdor Meeting In Coalombo Today

இதன்போதே இந்தியத் தூதுவர் குறித்த விடயங்களை கூறியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், கோவிந்தன் கருணாகரம், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், இரா.சாணக்கியன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட போது, என்னென்ன விடயங்கள் இந்திய தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்துள்ளார்.