சென்னை – யாழ்ப்பாணம் தினசரி விமானசேவை ஆரம்பம்!

0
177

தமிழகத்தின் சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 16 ஆம் திகதி முதல் தினசரி விமான சேவை அலையன்ஸ் ஏர் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது.

எனினும் கொரோனா தொற்றினால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. பிறகு 2022 டிசம்பர் முதல், வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் சேவை தொடங்கப்பட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள்

இந்த நிலையில் , கடந்த வாரம் கொழும்புவில் நடந்த இந்திய டிராவல் ஏஜென்ட்ஸ் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை தந்த ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்னை-யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அந்தவகையில் சென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்து சேரும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஏடிஆர்72 விமானம், மீண்டும் 12.30 மணிக்கு சென்னை புறப்படுகிறது.

அதேவேளை கொழும்புக்கு சென்று அங்கிருந்து சென்னை செல்ல யாழ்ப்பாண மக்களுக்கு வீண் நேர செலவும், பணமும் விரயமாகும். இந்நிலையில் யாழ்ப்பாண மக்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகின்றது.