கேள்விக் குறியாகும் வடக்கின் எதிர்காலம் – வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ்

0
337

வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ”அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.

நயினாமடு சீனித் தொழிற்சாலை விவகாரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீனித் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலே ஜனாதிபதியை சில தமிழ் தரப்புக்கள் தனியாகச் சந்தித்தன என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

அமைச்சரவைக் கூட்டம்

கேள்விக் குறியாகும் வடக்கின் எதிர்காலம் - வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ் | Vavuniya Sugar Factory Tamils Land Crisis Tna

மேலும், இந்தச் சீனி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே -18 அன்று சூம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் ரெலோவின் பேச்சளார் கலந்துகொண்டார்  எனவும் குறித்த பத்திரிக்கை  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகிய போதும் அந்தக் கட்சியின் தலைவர்கள் உள்ளூரில் வாயைத் திறக்கவில்லை.

இந்தத் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் தீர்மானம் மேற்கொண்ட அதே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒரு தொழிற்சாலைக்காக ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை.

முகநூலில் பதிவேற்றிய அமைச்சர்

மக்கள் நிலங்களாக இருந்து பின்னர் வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை இடம் பெறுவதைத் தனது சாதனையாக முகநூலில் பதிவேற்றிய அமைச்சர், இந்தச் சீனித் தொழிற்சாலைக்கான நிலங்கள் தொடர்பில் வாய் திறக்கவில்லை.

வனங்களாக அறிவிக்கப்பட்ட மக்கள் நிலங்களை விடுவிப்பதற்கு நீண்ட காலமாகவே குரல் எழுப்பி பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறி தரன்.இ.சாள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் இந்த விடயத்தை ஜனாதிபதிவரை கொண்டு சென்று, அவருடனான பேச்சுக்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அதனை வெற்றிகரமாக நகர்த்தியதை இரட்டடிப்புச் செய்து, ஏதோ தனது முயற்சியால்தான் இந்த விடயம் வெற்றி பெற்றதாகக் காட்ட முற்பட்ட அமைச்சர், சீனித் தொழிற்சாலைக்கு நிலம் வழங்குவது தொடர்பில் வாயே திறக்காமல் இருப்பதன் மூலம் அதற்கு ஆதரவளிக்கிறார் என்றே கருதவேண்டியுள்ளது.

கேள்விக் குறியாகும் வடக்கின் எதிர்காலம் - வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ் | Vavuniya Sugar Factory Tamils Land Crisis Tna

எது எப்படியிருந்தாலும் தமிழ் அரசுக் கட்சி இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

எமது பகுதிக்குப் பொருத்தமில்லாத இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு நாம் பகிரங்கமாகவே எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

ஏனெனில் , 72 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நீர் வளம் இல்லாத வடக்கில், நீரை அதிகம் உறிஞ்சும் கரும்புச் செய்கைக்கு வழங்குவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ரணில் விக்ரமசிங்க

இதனால் அந்த மாவட்டமே பாலைவனமாக மாறும் அபாயமும் உள்ளது. இந்த நிலத்தைவழங்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நேரடியாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிய முடிகின்றது.

ஆனால் அது பற்றி அவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த சில மாதங்களில் எம்மைப் பல தடவைகள் ஜனாதிபதி சந்தித்தபோதும் இது தொடர்பில் எந்தத் தகவலும் தெரிவிக்காதமை இந்தத் திட்டத்தின் உண்மையான உள்நோக்கம் குறித்து எமக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை நாம் முற்றாக எதிர்ப்போம். என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.