யாழில் மனசாட்சியின்றி இளைஞனை தாக்கிய போலீஸ்!

0
153

யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்துள்ளனர்.

பொலிஸாருக்கும் இளைஞருக்கும் இடையே முரண்பாடு

இவ்வாறு மறித்த பொலிஸார் அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் திறப்பினை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளது என்றும் அதனை காண்பிப்பதற்கு முன்னர் திறப்பினை தருமாறும் கோரினார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த பொலிஸார் இளைஞனை வலிந்து சோதனை சாவடிக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டதுடன் அவரை கைது செய்யவும் முயன்றனர். இதனால் பொலிஸாருக்கும் இளைஞருக்கும் இடையே முரண்பாடு தோன்றிய நிலையில் பொலிஸார் இளைஞனை தாக்கியுள்ளனர்.

யாழில் மனசாட்சியின்றி இளைஞனை தாக்கிய பொலிஸார்! | The Police Attacked The Young Man

இந்த தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்றுள்ள நிலையில் இளைஞரின் தலை மீதும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் இளைஞரை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

எனினும் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேநேரம் அந்த இளைஞனை தாக்கியதை அங்கிருந்தவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தனர்.

அவர்களையும் கைது செய்யப்பேவதாக மிரட்டிய பொலிஸார் பின்னர் அவர்களது கைப்பேசியை பறித்து காணொளியை அழித்த பின்னர் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.