கோட்டாபயவுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்

0
186

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி செயலகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊழல் ஒழிப்பு செயலணியின் ஒருங்கிணைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், கோட்டாபய ராஜபக்ச என்பவர் பொதுமக்களின் எதிர்ப்பலை காரணமாக ஜனாதிபதி பதவியை விட்டும் தப்பியோடியவர் என்ற நிலையில், அவருக்கு ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

மாதாந்தம் செலவிடப்படும் தொகை

மேலும் அவர் எழுப்பிய கேள்விகளாவன,

கோட்டாபய பதவியை விட்டுச் சென்றபின் அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் அதனை பராமரிக்க மாதாந்தம் செலவிடப்படும் தொகை? அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒதுக்கப்பட்ட பின்னர் பராமரிப்புக்காக இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள தொகை? கோட்டாபய மற்றும் அவரது அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை?

என்பன குறித்தும் தகவல்களை வெளியிடுமாறு முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவர் இந்தக்கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.