தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடரும் மர்மம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

0
188

ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு அவரது மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை வழங்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது பிரேத பரிசோதனை

இந்த தொலைபேசியில் மரணம் தொடர்பான சமூக ஊடக தரவு பதிவுகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பகுப்பாய்வுக்காக தொலைபேசி மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்களம், தரவு அழிக்கப்பட்டதா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடரும் மர்மம்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Dinesh Shafter S Murder Investigation Update

இதற்கமைய, தினேஷ் ஷாப்டரின் மனைவிக்கு தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் சம்பவம் தொடர்பான சாட்சியங்களை அழிக்க முடியுமா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் பிரிவின் ஊடாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை பாதுகாக்கும் அமைப்பு தொலைபேசி நிறுவனத்திடம் உள்ளதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் இரண்டாவது பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதுடன், இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதன் ஆய்வுகளுக்காக ஐவரடங்கிய மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.