தவறை ஏற்றுக்கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர்; ஆசிரியரின் சம்பளத்தை மீள செலுத்த ஒப்புதல்

0
190

முல்லைத்தீவு வலய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு, வரி அறவீட்டில் தவறு இழைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்வதாக முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணியாற்றும் காலத்தில் அறவிடப்படும் ஆசிரியர்களுக்கான வரி அறவீட்டில் சுற்று நிருபங்களை உரிய முறையில் பின்பற்றாமல் தனது மாதாந்த ஊதியத்தில் வரி கழிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியரால் 2 வருடங்களுக்கு முன்னர் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

எனினும் ஆசிரியரின் முறைப்பாட்டை கண்டுகொள்ளாத வலயக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியரினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

பணத்திற்குரிய காசோலை

முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு, குறித்த முறைப்பாட்டு தொடர்பில் பதில் வழங்க வருமாறு திகதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் குறித்த ஆசிரியரின் வரி அறவீட்டில் தவறு நடந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முறைப்பாட்டாளரான ஆசிரியருக்கு உழைக்கும் போது வரி அறவீட்டில் கழிக்கப்பட்ட பணத்தை மீள பெறுவதற்குரிய காசோலையை வழங்குமாறு முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.