பாலச்சந்திரன் போன்று உடையணிந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்..

0
187

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே 18 நடந்த அத்துணை சம்பவங்களும் என்றும் மாறாத வடுக்களாக தமிழர் மனதில் ஆழ பதிந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.

பொலிஸார் அச்சுறுத்தல் 

கடந்த(18.05.2023)ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தல் இடத்தில் சிறுவன் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் போன்று உடையணிந்து வரும் போது பொலிஸார் அவரை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

2009 மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலச்சந்திரனின் தருணங்களை மீள நினைவுப்படுத்தும் வகையில் பாலச்சந்திரன் போன்று உடையணிந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்திற்கு வரும் போதே இவ்வாறு சிறுவன் மற்றும் சிறுவனுடன் உடன் இருந்த அனைவரையும் பொலிஸார் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

பாலச்சந்திரன் பிரபாகரன் போன்று உடையணிந்து ,அவர் இறுதியாக அமர்ந்திருந்ததை போன்று சிறுவன் ஒரு இடத்தில் அமர்ந்த காட்சி அப்படியே பாலச்சந்திரனை பிரதிபலிப்பதாக இருந்தமையால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த சிறுவனை பார்த்து, மெய்சிலிர்த்து போனதுடன் பலர் கண்ணீர் சிந்தினர் என்பது யாராலும் மறக்கமுடியாத கடினமான நிமிடங்களாகும்.