கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செலவாகும் பெருந்தொகை பணம்!

0
255

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கமைய, செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

அதற்கடைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபாய ராஜபக்ஷ தற்போது பயன்படுத்துகின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு FactSeeker விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகளை தனித்தனியாக வழங்க முடியாது, ஏனெனில் இந்த செலவுகள் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் மற்ற தொடர் செலவுகளை உள்ளடக்கிய செலவின அறிக்கையில் ஒரே செலவினத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.