சூடானில் மூன்று பிள்ளைகளுடன் சிக்கிக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், பிரித்தானிய அரசாங்கம் வெளியேற்ற தாமதிக்கும் நிலையில், உயிருக்கு அஞ்சி எகிப்து எல்லைக்கு தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளுடன் தப்பிய பெண்
சூடான் தலைநகர் கார்டூமில் அமைந்துள்ள குறித்த மருத்துவரின் குடியிருப்பில் ஏவுகணை ஒன்று விழுந்த நிலையில் தமது மூன்று பிள்ளைகளுடன் அவர் தப்பியுள்ளார்.
பர்மிங்காம் பகுதியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் Lina Badr. போர் தொடங்கிய பின்னர் பலமுறை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காத நிலையில், தமது மூன்று பிள்ளைகளுடன் எகிப்து எல்லைக்கு தப்பியுள்ளார். இந்த நிலையில் தான் பிரித்தானிய அரசாங்கம் சூடானில் சிக்கிய குடிமக்களை மீட்க விமானங்களை அனுப்பியது.
மருத்துவர் Lina Badr தமது தோழியிடம் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவர், அரசாங்கம் மீதான நம்பிக்கையை மொத்தமாக இழந்துவிட்டேன். போர் சூழலில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் முடிவை எடுக்க 12 நாட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவர் Lina Badr-ன் குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கானோர் தற்போது எகிப்து எல்லையில் குவிந்துள்ளதாகவும், பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஒரு பயங்கரமான சூழ்நிலை
எல்லையோரத்தில் எந்த வசதிகளும் இல்லை, உணவு இல்லை, சிலர் பல நாட்களாக அங்கேயே முடங்கிக் கிடக்கின்றனர். இது ஒரு பயங்கரமான சூழ்நிலை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் Lina Badr-ன் கணவர் உசாமா சுலிமான் தெரிவிக்கையில், மொத்த குடும்பமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. சிறார்கள் உட்ப அனைவரும் அச்சத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த நடவடிக்கை அமுலுக்கு கொண்டுவந்த அடுத்த சில மணி நேரங்களில் மக்கள் உயிருக்கு அஞ்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். பல மடங்கு கட்டணம் செலுத்தியே பல குடும்பங்கள் எகிப்து எல்லைக்கு தப்பியுள்ளனர்.
பொதுவாக வெளிவிவகார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுண்டு, ஆனால் இந்த முறை சூடான் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
