தனுஷ்க குணதிலக்க மேலும் இரு சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதி..

0
233

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

31 வயதான தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

தனுஷ்க குணதிலக்க கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன. அதனூடாக அவருக்கு வட்ஸ் அப் பயன்படுத்துவதற்கும் இரவில் வெளியே செல்லவும் நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த நிலையில் தற்போது பிணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் குணதிலக்க தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் சமூக ஊடகங்களில் தொடர்புகொள்வதை தடுக்கும் வகையில், அவரது கணக்குகளை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முன்னதாக உத்தரவிட்டது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு மேலும் இரு சமூக ஊடகம் பயன்படுத்த அனுமதி | Dhanushka Gunathilak Allowed To Use Social Media

குணதிலக்கவின் வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசுத் தரப்புக்கு தகவல்களைத் திரட்ட மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தார்.

எனினும், முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தநிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கமைய கடந்த 2022 அக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலையில் சிட்னியின் ஹையாட் ரீஜென்சி விடுதியில் தனுஷ்க கைது செய்யப்பட்டார்.