குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
மூளைச்சாவால் உயிரிழப்பு
குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் உறுப்புகள் தானம்
அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.
மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.