இனி 10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அனுமதிக்கமாட்டோம் என நியூ ஜெர்சியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
குழந்தைகள் சேட்டை செய்தால் என்னதான் அழகு என்று நாம் சொன்னாலும் ரசித்தாலும் சில நேரங்களில் அது சற்று தொந்தரவாகத்தான் இருக்கும். மற்றவரின் தனிப்பட்ட நேரத்தை இது பாதிக்கும் படியாக இருப்பதால் சில திரையரங்கங்களில் குழந்தைகளை அழைத்து வர அனுமதி கிடையாது.

அது போல நியு ஜெர்சி மாகாணத்திலுள்ள ஒரு உணவகம் இனி 10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை என்று கூறியுள்ளது. வரும் மார்ச் 8 முதல் நியூ ஜெர்சியில் அமைந்திருக்கும் நெட்டிஸ் ஹவுஸ் ஆஃப் ஸ்பெகட்டி என்ற உணவகத்தில் தான் இந்த புதிய கண்டிஷன் போடப்பட்டுள்ளது.
குழந்தைகள் அதிகமாக சத்தமிடுவது, குறும்புத்தனம் செய்து மற்றவரை சங்கடத்திற்கு உள்ளாக்குவது, இடம் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உணவகம் தெரிவித்துள்ளது.

”எங்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும். ஆனால் உணவகத்திற்கு வரும் எந்தவொரு வாடிக்கையாளரும் மன நிறைவுடன் திரும்பவேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்துகொள்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள். அதனால் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.” என்று உணவகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது உணவகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் கிடைத்துள்ளது.