துருக்கி நிலநடுக்கம்; 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்பு குழு

0
226

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படை காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா உதவிக்கரம்

இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் தோஸ்த்’ திட்டத்தின் கீழ், பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ஆறு விமானங்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

துருக்கி நிலநடுக்கம்; 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படை | Turkey Earthquake Indian Rescue Team Saved Girl

இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படை குறித்து பெருமைக் கொள்கிறோம். துருக்கியில் நடந்த மீட்புப் பணிகளில், காஜியான்டெப் நகரில் ஐஎன்டி-11 என்ற குழு பெரன் என்ற 6 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில் சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மீட்பு படையினரை உலகின் முன்னணி பேரிடர் மீட்புப் படையாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.