சீன அதிகாரிகளின் வருகையால் தமிழ் மக்கள் அதிருப்தி!

0
63

அண்மைக்காலமாக சீன அதிகாரிகள் தமது குடியிருப்புப் பகுதிகளுக்கு விஜயம் செய்வது தொடர்பில் வடகிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஊடகம் ஒன்றை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வே தலைமையிலான குழு ஜனவரியில் யாழ்ப்பாணம் சென்றிருந்தது.

அங்கு அவர்கள் நிவாரணம் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர். ஏற்கனவே சீன மக்கள் படையினரின் பிரசன்னம் இலங்கையின் வடக்கில் உள்ளதாகவும் இது தமது பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தமிழ் நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

சீன மக்கள் பாதுகாப்புப்படையினர் இலங்கையின் வடக்கில் இருந்து அதி நவீன கருவிகளின் ஊடாக தமிழகத்தின் கரையோரப்பகுதிகளை அவதானித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சீன நாட்டினர் வடக்கில் கடல் வெள்ளரி உற்பத்தி என்ற அடிப்படையில் முல்லைத்தீவு, பருத்தித்துறை, அனலைத்தீவு, மீசாலை மற்றும் சாவகச்சேரி போன்ற இடங்களில் நடமாடுகின்றனர்.

மேலும் இது தமிழ் மக்கள் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் செயற்பாடாகவும் மக்கள் மத்தியில் கருதப்படுகிறது என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.