மக்களுக்காக செய்த தியாகத்தால் துன்பப்படும் கோட்டாபய-பசில் ராஜபக்ச

0
265

இலங்கை மக்களுக்காக தனது இரட்டை குடியுரிமையை தியாகம் செய்ததன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது துன்பத்தை அனுபவித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோடடாபய மேலும் சில நாட்கள் பதவியில் இருந்திருந்தால் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிடாது மேலும் சில நாட்கள் பதவியில் இருந்திருந்தால், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை கண்டிருக்க முடியும்.

தற்போது போராட்டம் நடைபெறுகிறதா? பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதா?. மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கின்றதா?. பிரச்சினைகள் தற்போதும் அப்படியே உள்ளன.

தற்போது இருப்பது எங்களுடைய அரசாங்கம் அல்ல. ரணில் ராஜபக்சவாக மாறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனரே அன்றி ராஜபக்சவினர் விக்ரமசிங்கவாக மாறி விட்டதாக கூறவில்லை.

தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வேன்

தேவை ஏற்படுமாயின் நான் எனது இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வேன். எனினும் தற்போது அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

கோட்டாபய ராஜபக்ச மக்களுக்காக தனது இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்து சிறிய தியாகத்தை செய்தார். மக்களுக்காக அவர் அந்த தியாகத்தை செய்து விட்டு தற்போது துன்பப்பட்டு வருகிறார் எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.