இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை மறக்க முடியாது; ரணில் விக்கிரமசிங்க

0
353

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 74 வருடகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் கூறினார்.

கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2001 ஆம் ஆண்டு தான் பிரதமராக இருந்த போது ஜோர்ஜ் புஷ்ஷின் தலைமையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவை புகழ்ந்து பேசிய ஜனாதிபதி ரணில்! | President Ranil Praised America

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் இருந்து இலங்கை மீள்வதற்கு பில் கிளிண்டன் தலைமையிலான அரசு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்தக் கடினமான நேரத்தில் ஜோ பைடனின் தலையீட்டுடன் எமது நாட்டுக்கு உதவி கிடைத்திருக்காவிட்டால் இவ்வருடப் பெரும் போகம் வெற்றியளித்திருக்க முடியாது என்றும் கூறினார்.

74 ஆண்டுகால அமெரிக்க – இலங்கை நட்புறவு, கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலாவது நாணயச் சட்டம் மற்றும் மத்திய வங்கியை நிறுவுதற்காக சிறந்த சட்ட கட்டமைப்பொன்றை தயாரித்தல் என்பவற்றுக்காக அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்குத் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இவ்வாறான நீண்ட கால மற்றும் உளப்பூர்வமான நல்லுறவை பேணிவரும் இலங்கையும் அமெரிக்காவும் தொடர்ந்தும் எதிர்காலத்தில் நெருங்கிய நண்பர்களாகச் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அமெரிக்காவும் இலங்கையும் பிரிக்க முடியாத பங்காளிகளாக, சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்வதாகவும் அவர் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “அடுத்த ஆண்டு சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

ஆனால், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளைத் திறக்க மிஷனரிகள் வந்தனர். மேலும் இலங்கையில் முதல் மருத்துவமனையை நிறுவியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் காலத்தில் யாழ்ப்பாணம் மக்களுக்கு அந்த வைத்தியசாலை பெரும் சேவையை ஆற்றியது.

இது ஒரு கிறிஸ்தவ மிஷனரி இயக்கம் மட்டுமல்ல. கேணல் ஒல்காட் ஆற்றிய சேவையை நாம் அனைவரும் அறிவோம். அவர் ஆரம்பித்த ஆனந்தா கல்லூரியில் கற்ற பல மாணவர்கள் இங்கும் உலகம் முழுதும் சிதறிக் கிடக்கின்றனர். எங்களுக்கிடையிலான உறவு வர்த்தகம், கல்வி, மதம் சார்ந்ததாக மட்டுமல்ல, அது இராணுவ விவகாரங்களுடன் தொடர்புடையதாகவும் இருந்தது.

குறிப்பிடத்தக்க நேரங்களில் நாங்கள் உங்களுக்காகப் பங்காற்றியிருக்கின்றோம். எனவே, தேவையான சமயங்களில் பங்களிக்கும் இந்த த் தொடர்பு நட்பு ரீதியான உண்மையான தொடர்பாகும். 1977 இல் நான் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசில் பிரதி வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றபோது, பிரதமர் லீ குவான் யூ மற்றும் பிரதமர் மல்கம் பிரேசர், ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பிரதமர் மார்கரெட் தட்சர் மற்றும் பிரதமர் நகாசோன் ஆகியோர் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் எங்களுக்கு ஆதரவளித்தனர்.

2001ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் வழங்கிய ஆதரவைக் கண்டிப்பாக இங்கு குறிப்பிட வேண்டும். சமாதானப் பேச்சுக்களை நடத்துவதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்தவும் சுனாமி அனர்த்தத்தினால் நாம் பாதிக்கப்பட்ட போதும் அவர் ஆற்றிய விசேட பங்களிப்புகளை இங்கு நினைவுகூருகின்றேன். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் ஜனாதிபதி கிளின்டன் ஆகியோர் எமக்கு ஆதரவு வழங்க இலங்கை வந்தனர்.

இது நீண்டகால நட்புறவு, ஜனநாயகக் கொள்கைகளை சீர்திருத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் நான் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவின் ஆதரவு கிடைத்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு ஆதரவளித்த ஜனாதிபதி பைடனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் ஆதரவு இல்லாமல் நாங்கள் பெரும்போகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்க முடியாது” என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.taatastransport.com/